மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105)
மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்
பிராக்ஸ்டன் ஹிக்ஸ் (மருத்துவம்
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105)
கருப்பைச் சுருங்கல்: முதல் மூன்று மாதப் பருவத்திலும், மூன்றாம் மூன்று மாதப் பருவத்திலும் கருப்பையின் தசைநார்கள் லேசாகச் சுருங்கும். ஆனால், பெரும்பான்மை-யான பெண்களுக்கு இந்த நிலை இரண்டாம் மூன்று மாதப் பருவத்தில் உண்டாகும். சில பெண்கள் இந்த மாற்றத்தை உணராமலும் இருப்பர். இந்தச் சுருங்கல் அடிவயிற்றில் லேசான வலியை உண்டாக்கும். தசைப்பிடிப்பு ஏற்பட்டதுபோல் (Cranps) உணர்வு பெண்-களுக்குத் தெரியும். சில நேரங்களில் அடிவயிறு கெட்டிப்பட்டதுபோல் தோன்றும். “பேறுகாலப் பொய்வலி’’ (False labor pain) என மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவர். வலி தொடர்ந்து அதிகமானாலோ, ஏதேனும் கசிவு (இரத்தக் கசிவோ, வெள்ளைப்படுதல் போன்றவை)கள் ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டாலோ மருத்துவ அறிவுரை பெறுவது நலம். பொதுவாக அதிக அளவு குடிநீர் குடிப்பதும், ஓய்வு எடுப்பதும் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட உதவும். இவ்வறிகுறியைப் பற்றி பெண்கள் அஞ்ச வேண்டியதில்லை.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Frequent Urination):
குழந்தை கருப்பையில் வளர, வளர அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். குழந்தை கருப்பையில் இருக்கும் நிலைக்கேற்ப சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம். கருப்பை, அதன் உள்ளிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைவதால், சிறுநீர்ப்பையை அழுத்துவதால் இந்த உணர்வு நிகழ்கிறது. தும்மும்பொழுதும், இருமும் பொழுதும் சில நேரங்களில் சிறுநீர்க் கசிவு ஏற்படும். ஆனால், இச்சிறுநீர்க்கசிவு (ரிமீரீணீறீs) அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் குறைக்கும். அடிக்கடி (சில நேரங்களில் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறைகூட) சிறுநீர் கழிப்பதால், உடலின் நீர்மச் சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க அதிக அளவு குடிநீர் குடிக்க வேண்டும். இது தாய்க்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.
மூன்றாம் மூன்று மாதப் பருவம் (Third Trimester) அறிகுறிகள்:
கருவுற்ற காலத்தின் கடைசி மூன்று மாதங்களை மூன்றாம் பருவம் என்கிறோம். 29 முதல் 40 வாரங்கள் இந்தப் பருவம் நீடிக்கும். குழந்தையின் தலைப்பகுதி, கருப்பையின் கீழ்ப்பகுதிக்குத் திரும்பும். பெரும்பாலான பெண்கள் இந்தப் பருவத்தில் பல கடினமான அறிகுறிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பெண்களுக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் கொடுத்தாலும், முதல் பேறுகாலம் என்றால், மனத்தில் ஒருவகை பய உணர்ச்சியும் பல பெண்கள் இப்பருவத்தில் பெறுவர்.
* முதல் பருவத்தில் ஏற்பட்டதுபோல் களைப்பு, குமட்டல், வாந்தி வரலாம்.
* குழந்தையின் வளர்ச்சி அதிகமாவதால் கருப்பை விரிவடையும். அதனால் பெருமூச்சு விட சிரமம் ஏற்படலாம்.
* புரண்டு படுக்கும்பொழுது சங்கடம் ஏற்படக் கூடும்.
* உடல்சூடு சற்று அதிகரிக்கலாம்.
* கருப்பை விரிவடைந்து, சிறுநீர்ப் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர்க் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
* உடலில் நீர்மச் சேர்தல் (Oedena) ஏற்படும். அதனால் கணுக்கால், கைகள், விரல்கள், முகம் ஆகிய பகுதிகளில் நீர்க்கோத்து வீக்கம் ஏற்படும். இந்த வீக்கங்கள் திடீரென வேகமாக அதிகமானால் அல்லது உடல் எடை திடீரென அதிகமானாலோ மருத்துவ அறிவுரை பெற வேண்டும். ஏனெனில் இது “முன்பேறுகால வலிப்பு’’ (Pre-eclampsia) ஏற்படும். அறிகுறியாக இருக்கலாம்.
* அடிக்கடி கால்களில் தசைப்பிடிப்பு (Leg cramps) ஏற்படும்.
* ஊக்கி நீர் (Hormones) அதிகம் சுரப்பதால், கை, கால்கள், முகம் ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி ஏற்படும்.
* ஏற்கெனவே முடி இருக்கும் பகுதிகளில் முடி அடர்த்தியாக வளரும்.
* தொப்புள் வெளித்தள்ளி இருக்கும்.
* வயிறு, மார்பு, தொடைப் பகுதிகளில் தோல் விரிவதால் “வரித் தழும்புகள்’’ (Stretch Marks) ஏற்படும்.
* வயிற்றில் அரிப்பு ஏற்படும்.
* பாலுணர்வு (Sex drive) அதிகம் ஏற்படலாம்.
* முகத்திலும், உடலிலும் கருமை படரும்.
* மலச்சிக்கல் (Constipation)
* நெஞ்செரிச்சல் (Heartburn)
* உணவு செரிக்காமை (Indigestion)
* முதுகு வலி
* சிரைகள் வீக்கம் (Vericose Vains), கால்களிலும் தொடைகளிலும் உண்டாகும். வலியும் தோன்றலாம்.
* வெள்ளை படுதல் (Leukorrhea)
* மார்புகள் வலி (Breast tenderness)
* குழந்தை அடிவயிற்றுக்கு இறங்கும் உணர்வு, இடுப்புப் பகுதியில் வலி (Head fixing) ஏற்படும்.
* மார்புக் காம்புகளில் ஒருவகைத் திரவம் வெளிப்படும்(Colostrum). இதையே “சீம்பால்’’ என அழைக்கிறோம்.
* பொய் வலி(False Pain) (Broxton-Hicks contraction): உண்மையாக இடுப்பு வலி எடுத்து குழந்தை பிறக்குமுன், குறிப்பிட்ட இடைவேளைகளில் பொய் வலிகள் உண்டாகும்.
* உணர்ச்சி வயப்படுதல்: (Emotional distribances): பேறு கால நாள்கள் நெருங்க, நெருங்க தாய்க்கு பலவித மனக் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு. கருவுற்ற பெண் தனக்கிருக்கும் ஆர்வங்களில் மனதைச் செலுத்தலாம். எழுதுதல், படித்தல், தையல் பாடல்களைக் கேட்டல், இசைக் கருவிகளை இசைத்தல் போன்றவற்றில் கவனத்தைத் திசை திருப்பலாம்.
பேறுகால முற்பகுதி:
பேறுகால நாள் நெருங்க, நெருங்க, மருத்துவ அறிவுரை அடிக்கடி பெற வேண்டிய நிலை ஏற்படலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை மருத்துவ அறிவுரை பெற வேண்டும்.
கொரானோ (Covid 19) தடுப்பூசிகள் தாய் போட்டுக் கொள்ள வேண்டும். அது எந்தப் பக்க விளைவையோ, ஆபத்தையோ, நோய்த் தொற்றையோ உண்டாக்காது.
மருத்துவர் அறிவுரைப்படி தடுப்பூசிகள் சரியான மாதங்களில் போட்டுக்கொள்ள வேண்டும். அது குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும்.
சில பெண்களுக்கு, பேறுகால “நீரிழிவு குறைபாடு’’ (Gestational Diabetes)ஏற்படும். குழந்தை பிறந்தவுடன், இக்குறைபாடு சரியாகிவிடும். ஆனால், மருத்துவர் அறிவுரையின் பேரில் இக்குறைபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் பேறுகால நேரத்தில் வலிப்பு (Eclampsia) ஏற்படக் கூடுமாதலால், மருத்துவர் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். பேறுகால வலிப்பு மிகவும் ஆபத்தானது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரத்த சோகை கருவுற்ற பெண்கள் பலருக்கு ஏற்படும் குறைபாடு. தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இக்குறைபாட்டைச் சீராக்கலாம்.
மருத்துவப் பணியாளர்கள் குழந்தையின் வளர்ச்சி, நாடித்துடிப்பு (Foetal Heart Sound), குழந்தை கருப்பையில் நகருதல் (Foetal Movement) ஆகியவற்றையும் எடையையும் கண்காணித்து அறிவுரை வழங்குவர். அதை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
மீள்ஒலிப் பதிவு (Ultra Sonogram): குழந்தையின் வளர்ச்சியைத் துல்லியமாக நமக்குத் தெரியப்படுத்தும்.
(தொடரும்…)):
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக