ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (102)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (102)

Uncategorized மருத்துவம் ஜூன் 1-15 2022

மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்

ஆண் இனப்பெருக்க இயக்கம்:

உடலுறவின்பொழுது வெளிப்படும் 15 மில்லியன் முதல் 200 மில்லியன் ஆண் அணுக்கள் (Sperms) இருந்தாலும் ஒரே ஓர் ஆண் அணுதான் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு, முட்டையின் உள் சென்றுவிடும். சில நேரங்களில் இரண்டு அணுக்களோ, மூன்றணுக்களோ முட்டைக்குள் வெற்றிகரமாக செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அது போன்ற நிலைகளில்தான் இரட்டைக் குழந்தை, மூன்று குழந்தைகள் என்று பிறக்கக்கூடிய நிலை உண்டாகும். ஆண் அணு பெண்ணின் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு உள் நுழையும் இந்த நிகழ்வையே “கருவுறுதல்’’ (Fertilisation) என்கிறோம். ஆண் அணு, பெண் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு அதன் உள் நுழைந்தவுடன் கருவுறுதல் என்னும் நிகழ்வு உண்டாகிறது. கருவுற்ற பெண் முட்டை 3 முதல் 5 நாள்களில் கருக்குழாயிலிருந்து நகர்ந்து கருப்பையை அடைந்து, அதன் சுவரில் ஒட்டிக் கொள்ளும் (Implantation). இயல்பான நிலையில் மாதவிலக்கு நடந்த இரண்டு வாரங்களில் இந்த நிகழ்வு ஏற்படும். கருமுட்டை வெளிப்பாடு (Ovulation) மாதவிலக்கு முடிந்த 14 நாள்களில் (இரண்டு வாரங்களில்) நிகழும். ஆண் கரு இந்தப் பருவத்தில், பெண் முட்டையோடு, இணைந்தால் கருவுறும் வாய்ப்பு அதிகம். ஆண் கரு, பெண் கருவோடு இணைந்து உருவாகும் கருவுற்ற முட்டை (Zygote) நகர்ந்து கருப்பையை அடைய மூன்று முதல் அய்ந்து நாள்கள் ஆகும். அய்ந்து நாள்களில் கருவுற்ற முட்டை, கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொண்டு வளர்ச்சி அடையத் துவங்கும். கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொண்டு வளர்ச்சி அடையத் துவங்கும். கருப்பைச் சுவரில் ஒட்டிய கருமுட்டையில் செல் பகுப்பு ஏற்படும். ஒரு செல் இரண்டாகவும், இரண்டு செல், நான்காகவும், நான்கு செல்கள் எட்டாகவும், மேலும் பல செல்களாகவும் பகுப்படைந்து பெருகிக் கொண்டே செல்லும். ஒரு செல், இரண்டாகப் பிரிந்தும், மேலும் பலவாகப் பிரிந்தும் வளர்ச்சியடையும்பொழுது அக்கரு, “கருக்கோளம்’’ (Blastomeres) என்றழைக்கப்படும்.

முதல் கருக்கோளம் இரண்டு செல் பகுப்பாக மாறி செல் கோளமாக உருவாக இரண்டு நாள்கள் ‘கரு’ எடுத்துக்கொள்ளும். இரண்டு செல் பகுப்பு, நான்காகப் பிரிந்து கருக்கோளமாக
(4 Blastomeres) உருவாக மூன்று நாள்கள் ஆகும். நான்கு செல்கள் மேலும் ஓரிரு நாள்களில், எட்டு செல் உடைய கருக்கோளமாக (8 Blastomeres) மாறும். முழுமையான வளர்ச்சியடைந்த கருக்கோளமாக (Morula) வளர்ச்சியடைந்த கருவில் இரண்டு பிரிவுகள் உண்டாகும். வெளிப்புறம் அமைந்துள்ள செல்கள் (Outer Cell Mass), வெளிப்புற செல்கள் தொகுப்பாகவும் (Trophectoderm), உள்புற செல்கள் ஒருங்கிணைந்து, ‘உள்புற செல் தொகுப்பாக’வும் (Inner Cell Mass – ICM) மாறுதலடையும். செல்கள் அமைப்பில் மாறுதல் நிகழ்ந்ததும், ஒரு நீர்க்குழி (Cavity) (Blastocyst) கருவினுள் உருவாகும். கருவின் அமைப்பில் நாற்பத்தாறு ‘மரபுத்திரி’கள் (Chromasomes) இருக்கும். இதில் 23 மரபுத்திரிகள் ஆணிடமிருந்தும், 23 மரபுத்திரிகள் பெண்ணிடமிருந்தும் கிடைக்கப் பெற்றவை. பெண்ணிடமிருந்து XX என்ற மரபுத்திரியும், XY என்ற மரபுத்திரி ஆணிடமிருந்தும் கருவில் இருக்கும். XX மரபுத்திரி ஆதிக்கம் அதிகமிருந்தால் பெண்ணாகவும், XY அதிகமிருப்பின் ஆண் குழந்தையாகவும் கரு உருவாகும். மரபுத்திரிகள் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கின்றன. ஒரு மாதத்தில் “சினை நீர்க்கோளமாக’’ (Blastocyst) கரு உருமாறும். வெளிப்புற செல் தொகுப்பு ‘நஞ்சுக் கொடி’’யாகவும் (Placenta), உள்புறச் செல் தொகுப்பு குழந்தையாகவும் உருவாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் 4 வாரங்களில் நிகழும். கருவுற்ற மூன்றாவது வாரத்திலோ, கருவுற்ற 5ஆவது வாரத்தில் ஊக்கி நீர் (Hormone) உற்பத்தி அதிகமாகும். HCG என்ற ஊக்கி நீர், கருவிலிருந்து உற்பத்தியாகும். இந்த ஊக்கி நீர், சினைப்பையில் இருந்து சினை முட்டை மேலும் உருவாகாமல் தடுக்கிறது.

அதன் மூலம் மேலும் கருவுறுதல் நிகழாமல் தடுக்கப்படுகிறது. கரு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு கருவுற்ற நாள் முதல், குழந்தை பிறப்பு வரை ஏற்படும் மாற்றங்கள் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூன்று மாதங்களும் (Trimester) ஒரு பருவமாக, முதல் மூன்று மாதப் பருவம் (I Trimester), இரண்டாம் மூன்று மாதப் பருவம் (II Trimester), மூன்றாம் மூன்று மாதப் பருவம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பருவம் கருவுற்ற முதல் வாரம் முதல், 12ஆம் வாரம் வரையும், 13ஆம் வாரம் முதல் 26ஆம் வாரம் வரை இரண்டாம் பருவமாகவும், 27ஆம் வாரம் முதல், பேறுகாலம் நிகழ்வு வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பேறுகாலம் 280 நாள்கள் நடைபெறும் நிகழ்வு. 40 வாரங்கள் நடைபெறும் (10 மாதங்கள்) நிகழ்வு என்றும் இதைக் குறிப்பிடுவர். மூன்றாம் பருவம் கடைசியில் 15 நாள்கள் முன்போ அல்லது பின்போ மகப்பேறு நிகழ வாய்ப்புண்டு. மாதவிலக்கு நின்ற நாள்களை சரியாகக் கணிக்கத் தவறுதலால் இந்த மாறுபாடு நிகழ்கிறது. ஆனால், இப்பொழுது ‘மீள் ஒலி ஆய்வு’ (Ultra Sound), மூலம் கருவின் வளர்ச்சியையும், பேறுகால நாளையும் துல்லியமாகக் குறிப்பிடும் நிலை உள்ளது.
(தொடரும்…)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக