ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

உலகை நடுங்கச் செய்த உயிர்க்கொல்லி நோய்கள்

 

தெரிந்துகொள்வோம் : உலகை நடுங்கச் செய்த உயிர்க்கொல்லி நோய்கள்

2022 மே 16-31 2022

சீனாவில் கொடுந்தொற்று

5,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் ஒரு கிராமத்தையே பெரும் நோய்த்தொற்று ஒன்று அழித்தொழித்திருக்கிறது. தற்போது சீனாவில் ‘ஹமீன் மங்கா’ என்றழைக்கப்படும் அகழாய்வு மய்யத்தில், அந்த நோய்க்குப் பலியான நூற்றுக்கணக்கானவர்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடுத்தர வயதினர், இளைஞர்கள், சிறார்கள் என்று எவரையும் விட்டுவைக்காத அந்த நோய்த் தொற்றுக்குப் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் உயிர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை.
அன்டோனியோ அம்மை நோய்
(கி.பி.165-180)
ரோமப் பேரரசின் படை வீரர்கள் பார்தியா அரசுடன் சண்டையிட்டு தாயகம் திரும்பியபோது, வெற்றியோடு அன்டோனியோ அம்மை நோயையும் கொண்டு வந்தனர். அந்த நோய் 15 ஆண்டுகளாகப் பரவி 5 லட்சம் பேருக்கு மேல் பலி கொண்டது. இதனால் ரோமப் பேரரசு பலவீனமடைந்து, பல்வேறு படையெடுப்புகளுக்குக் காரணமானது.
ஜஸ்டீனியன் பிளேக் (கி.பி.541-542)
கிழக்கு ரோமப் பேரரசில், ஒரு பிளேக் நோய் பரவி அந்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. கி.பி.541, 542ஆம் ஆண்டுகளில் பலமுறை கட்டுப்பாட்டுக்குள் வந்து மீண்டும் பரவிய அந்த நோய்க்கு அய்ரோப்பிய மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் பலியானார்கள்!
பிளேக் நோய் (கி.பி.1346-1353)
1300களில் ஆசியாவில் தோன்றிய பிளேக் நோய்த் தொற்று அய்ரோப்பாவுக்குப் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. எலியின் உடலில் உருவாகிய இந்த பிளேக் நுண்ணுயிர், ஈக்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவியது. இந்த நோயால் அய்ரோப்பிய மக்கள் தொகையில் பாதிப் பேர் மடிந்துபோனதாகக் கூறப்படுகிறது. இந்த நோயின் பாதிப்பிலிருந்து அய்ரோப்பா மீண்டு வர 200 ஆண்டுகள் ஆனது.
கோகோலிஸ்ட்லி (கி.பி.1545-1548)
கோகோலிஸ்ட்லி நோய்த் தொற்று பரவலால் மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்கப் பிராந்தியத்திலும் 1.50 கோடி பேர் செத்து மடிந்தனர். டைஃபாய்ட் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த நுண்ணுயிரி மனிதர்களை தற்போதும் அச்சுறுத்தி வருகின்றது.
அமெரிக்க தொற்று நோய்கள்
(16ஆம் நூற்றாண்டு)
அய்ரோப்பா மற்றும் ஆசியப் பகுதிகளில் அவ்வப்போது உருவான அம்மை போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்க கண்டம் முழுவதும் பரவியது. குறிப்பாக அய்ரோப்பியர்களிடையே அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாத அம்மை அமெரிக்க பூர்வ குடிமக்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. இதன் விளைவாக பூர்வகுடிகளில் 90 சதவிகிதம் பேர் உயிரிழந்தனர். பிற்காலத்தில் பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து படைகள் அமெரிக்காவை எளிதில் ஆக்கிரமித்ததற்கு, அவர்களை எதிர்த்துப் போரிடக்கூடிய பூர்வகுடிமக்கள் அம்மையால் அழிக்கப்பட்டது காரணமாக அமைந்தது.
லண்டன் பிளேக் (1665 – 1666)
கருப்பு மரணம் நோய்த் தொற்றின் உக்கிரமான கடைசி அலை, லண்டன் நகரில் கடந்த 1665ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. எலிகளால் பரவிய அந்த நோய்த்தொற்றிலிருந்து தப்புவதற்காக லண்டனிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அந்த அலை அடங்குவதற்குள் நகர மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினர் பலியாகினர்.
எய்ட்ஸ் (1981 முதல்)
அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று முதல் முறையாகக் கண்டறியப்பட்டாலும், 1920களில் மேற்கு ஆப்பிரிக்காவில் மனிதக் குரங்குகளிட-மிருந்து இந்த நுண்ணுயிரி மனிதர்களின் உடலுக்குள் பரவியிருக்கலாம் என்று கருதப்-படுகிறது. கூட்டு மருந்து சிகிச்சைகள் உள்பட பல்வேறு சிகிச்சை முறைகள் தற்போது எய்ட்ஸ்க்கு கண்டறியப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு இதுவரை 3.50 கோடி பேர் பலியாகியுள்ளனர்.
ரஷிய பிளேக் (1770 -1772)
ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் பிளேக் நோய்த்தொற்று 1770களில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப் பட்டவர்கள், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். நோய்ப் பரவலைத் தவிர்ப்பதற்காக தொழிற்சாலைகள் மாஸ்கோவுக்கு வெளியே மாற்றப்பட வேண்டும் என்ற அரசி இரண்டாம் கேத்தரீன் உத்தரவால் கலகம் வெடித்தது. இந்த நோய்ப் பரவல் ஓய்வதற்கு முன்பு 1 லட்சம் பேரை இந்நோய் கொன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக