வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!

 

மருத்துவம் : மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!

பிப்ரவரி 1-15,2022

இன்றைய நவீன அறிவியல் உலகம் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. மக்களின் மூடநம்பிக்கையை அகற்றி, மனிதர்களிடம் பகுத்தறிவுப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறது. மனித மூளை புராணங்களில் கட்டுண்டிருந்த நிலையில், நவீன மருத்துவ அறிவியல் குருதிக் கொடை வழங்குவதற்கே தயங்கிய மனிதர்-களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. விழிக்கொடை, உறுப்புக் கொடை, உடல் கொடை எனப் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டது.

மருத்துவ அறிவியலில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் ஹிதேந்திரனின் இதயம் விமானத்தில் கொண்டு வரப்பட்டு சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டதைத் தமிழ்நாடு ஜாதி, மதம் கடந்து கொண்டாடியது. அந்த வகையில் அமெரிக்கா உறுப்பு மாற்று சிகிச்சையில் புதிய சாதனையைப் படைத்து உலகுக்கு வழிகாட்டியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த

57 வயதான டேவிட் பென்னட் என்பவர் இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

வேறு இதயத்தைப் பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்கிற நிலையில் அவர் இருந்தார்.

இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்குப் பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அமெரிக்க சுகாதாரத் துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்குப் பொருத்தப்-பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் பென்னட் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கெனவே மனிதர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.

எனவே, மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்-பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும். உலகெங்கும் உடல் உறுப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப் பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பன்றி என்னும் சொல்லை இழிவழக்காகப் பயன்படுத்துவது மனிதர்களின் வழக்கம். ஆனால், அந்தப் பன்றிகள்தாம் தங்கள் உயிரைத் தியாகம் செய்து மனிதர்களைக் காப்பாற்றப் போகின்றன. மருத்துவ உலகில் மற்றொரு புதிய தொடக்கமாக இச்சாதனை பார்க்கப்படுகிறது.

– ச.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக