வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (98)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (98)

ஏப்ரல் 1-15,2022

மகப்பேறு (PRAGNANCY)

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடிப்படை வாழ்வியல் என்பது “இனப்-பெருக்கம்’’ (Progeny) என்பதே ஆகும். இனப்பெருக்கம் செய்ய பருவமடைய வேண்டும். பருவமடைய உயிரிகள் வளர்ச்சியடைய வேண்டும். வளர்ச்சியடைய உணவு உண்ண வேண்டும். உணவு உண்டால் கழிவு உற்பத்தியாகும். கழிவுகளைவெளியேற்ற வேண்டும். ஆக, உயிரிகளின் அடிப்படையான இனப் பெருக்கத்தை முன்னிட்டே உடலின் அனைத்து செயல்பாடுகளும், அச்செயல்-பாடுகளை செயல்படுத்த உறுப்புகளும் தோன்றுகின்றன. உயிரிகளில் பல முட்டை-யிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. (ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள், பறப்பன, நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள்), சில உயிரிகள் குட்டி ஈன்று, இனப்பெருக்கம் செய்கின்றன (பாலூட்டிகள்). ஒரே உயிரணுவை உடைய உயிரிகூட உயிரணு (Cell) பகுப்பின் மூலம் தம் இனத்தைப் பெருக்குகின்றன. வைரஸ் எனப்படும் அரை உயிரிகூட, உயிரிகளோடு ஒட்டிக் கொண்டு, முழு உயிரியாக மாறி, பல நூறாகப் பெருகுகின்றன. நுண்ணுயிரிகள் (Bacterias), உயிரணுப் பகுப்பு (Cell division) மூலமும், புதிய உயிரித் தோற்றம் மூலமும் பல கோடிகளாகப் பல்கிப் பெருகுகின்றன. ஆக உயிரிகள் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் முதல், பெரிய உயிரியான திமிங்கிலம் வரை இனப்பெருக்கம் என்பதையே அடிப்படையாகக் (Basic Instict) கொண்டே-இயங்குகின்றன. பொதுவாக இனப்பெருக்கம், வளர்ச்சியடைந்த உயிரிகளுக்கு, உடலுறவின் மூலமும் (sexual reproduction), நுண்ணுயிர்கள் உடலுறவின்றி (Asexual reproduction) முறையில் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. குட்டி போட்டு பாலூட்டிகளில் (Mammels) அதிக வளர்ச்சி-யடைந்த உயிரியான மனித இனம் உடலுறவு கொள்வதன் மூலம் தன் இனத்தைப் பெருக்குகின்றது. குழந்தைப் பருவம் தாண்டி ஆண், பெண் இரு பாலருக்கும் வாலிபப் பருவம் வரும்பொழுது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை “இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்கள்’’ (Secondary Sexual Charecters) என்கிறோம்.

இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்கள் ஏற்பட அடிப்படைக் காரணிகளாக அமைவது ‘ஊக்கிநீர்களே’ (Hormones) ஆகும். வாலிப வயதில் (Adolacent) ஆண்களுக்கும், பெண்-களுக்கும் சுரக்கும் ஊக்கி நீர்களே, உடலியல் மாற்றங்களை உண்டாக்கி, மகப்பேறு அடையும் பக்குவத்தை உண்டாக்குகின்றன. நம் உடலில் ஏற்படும் மாற்றத்திற்கான காரணிகளையும், உடல் மாற்றங்களையும் அறியும் முன்பு ‘இனப்பெருக்கம்’ உண்டாக்கும் உறுப்புகளையும், உடலில் ஏற்படும் மாற்றங்களையும் பார்ப்-போம். மனித இனத்தில் மற்றும் வளர்ந்த உயிரினங்களில் ஆண், பெண் என்ற பாகுபாடுகள் இருக்கின்றன.

ஆண் இனப்பெருக்க உறுப்புகள்:

இடுப்பு எலும்புக்கு வெளிப்புறத்தில்தான் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் அமைந்துள்ளன. இனப்பெருக்க உறுப்புகளின் அடிப்படைப் பணி ஆண் அணுக்களை உற்பத்தி செய்வது. ஆண் அணுக்கள் (Sperm), விந்து என்றழைக்கப்படுகிறது. ஆண் அணுக்கள், பெண் அணுக்களோடு (Ovum) இணைந்து கரு உண்டாகிறது. ஆண் இனப்-பெருக்க உறுப்புகள் மூன்று நிலைகளில் அமைந்துள்ளன.

முதல் வகை ஆண் அணுக்களை உற்பத்தி செய்து, அவற்றைப் பாதுகாப்பாகத் தேக்கி வைக்கும் பணியைச் செய்கின்றன. ஆண் அணுக்கள் உற்பத்தி ‘விதை’களில் (Testis) நிகழ்கிறது. விதைகள், இடுப்பெலும்புக்கு முன்புறம், வெளியே அமைந்துள்ள விதைப்பையில் (Scortum) அமைந்துள்ளன. உற்பத்தியாகும் ஆண் அணுக்கள், உடலின் இயல்பான வெப்ப நிலையில் கூட உயிர்வாழ முடியாத நிலையில் இருப்பதால், இயற்கையில் உடலின் வெளிப்பகுதியில் விதைப்பையில் விதைகள் அமைந்துள்ளன. விதைகளில் உற்பத்தியாகும் ஆண் அணுக்கள் முழு வளர்ச்சியடைந்ததாக இருக்காது. அவை “விந்தணு முதிர்ச்சிப் பையில்’’(Epididymis) இல் தேங்கும். அங்கு விந்தணுக்கள் முழு வளர்ச்சியடையும். இது முதல் நிலை.

இரண்டாம் நிலையில் ஆண் அணுக்கள் மிதந்து செல்வதற்கு வாய்ப்பாக நீர்மத்தை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் அமைந்துள்ளன.

“கூப்பர் சுரப்பிகள்’’ (Cowper’s Gland) விந்துவில் உள்ள நீர்மத்தைச் சுரக்கின்றன. “சிறுநீர்க் குழாய் மொட்டுச் சுரப்பிகள்’’ (Bulbo urethral gland) என்றும் இவை அழைக்கப்-படுகின்றன. விந்துப் பை (Seminal Vasicles), புராஸ்டேட் சுரப்பிகள் (Prostate glands), விந்துக் குழாய்கள் (Vas deferens) ஆகிய உறுப்புகள் இந்த இரண்டாம் நிலை உறுப்புகளாக அமைந்திருக்கும்.

மூன்றாம் நிலை உறுப்புகளாக “ஆண் குறி’’ (Penis), “சிறுநீர்க் குழாய்’’ (Urethra), விந்துக் குழாய்கள் அமைந்திருக்கும். சேகரித்து வைக்கப்-பட்டுள்ள விந்தைப் பெண் குறிக்குள் செலுத்தும் பணியை இந்த உறுப்புகள் செய்கின்றன. இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்கள் ஏற்படவும், விந்து உற்பத்திக்கும் அடிப்படைக் காரணியாக அமைவது “ஆண்ட்ரஜன்’’  (Androgen), “டெஸ்டோஸ்டீரான்’’ (Testosterone) என்ற ஊக்கி நீர்களே (Hormones) ஆகும். விதைகளில் உற்பத்தியாகும் ஆண்ட்ரஜனின் ஒரு கூறே டெஸ்டோஸ்டீரான் ஊக்கி நீராகும். ஆண்ட்ரஜன் ஊக்கி நீர் பெண்களுக்கும் உற்பத்தியாகும். ஆனால், அளவில் குறைவாக இருக்கும். இதன் அளவில் மாறுபாடு அல்லது கூடுதல் உற்பத்தி பெண்களுக்கு ஏற்பட்டால், அதனால் மூன்றாம் பாலினமான திருநங்கைகள் தோன்றுகின்றனர். இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்கள் ஏற்பட ஊக்கி நீர்களே காரணமா-கின்றன. சிறுவர்கள், வாலிபர்களாக மாற்றமடையும் பருவ மாற்றங்களுக்கும் இதுவே காரணமாகின்றது. உடல் வளர்ச்சியும், மார்புகள் விரிவடைதல், சதைகள் கெட்டிப்படுதல், தோள்கள் விரிவடைதல், கழுத்தில் “ஆடம் ஆப்பிள்’’ (Adam’s Apple) வளர்ச்சி போன்றவை உடல்நிலை மாற்றங்-களாக ஏற்படும். எலும்புகள் வளர்ச்சியடையும். உடலின் உயரம் கூடும். குரல் உடையும். முகத்தில் மீசை, தாடி முளைக்கும். விதைகளில் சுரக்கும் ஊக்கி நீரால் விந்து உற்பத்தியாகும்.

பெண் இனப்பெருக்க உறுப்புகள்:

ஆண்கள் இனப்பெருக்க உறுப்புகள் போலன்றி, பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் உடலின் உள்புறம் அமைந்திருக்-கின்றன. பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகள் மூன்று நிலைகளில் அமைந்திருக்கும். பெண் குறி வெளியிதழ் (Vulva), பிறப்புறுப்புக் குழல் (Vagina), கருப்பை (Uterus) ஆகிய பகுதிகளாக அவை அமைந்திருக்கும். இவை தவிர, கருப்பையின் இருபுறமும் சினைப்பைகள் (Ovaries) பக்கத்திற்கு ஒன்றாக அமைந்திருக்கும். சினைப்பைகளில் இருந்து இரண்டு குழாய்கள் (பக்கத்திற்கு ஒன்றாக) துவங்கி கருப்பையில் முடியும். ‘கருமுட்டைக் குழாய்’ (Fellopian Tubes) என்னும் பெயருடைய இக்குழாய்கள் வழியேதான் சினைப்பைகளில் உற்பத்தியாகும் சினைமுட்டை (பெண் அணு) உற்பத்தியாகி கருப்பையை அடையும். கருப்பையில்தான் ஆண் அணுவோடு இணைந்து கரு உண்டாகும். பெண் குறி வெளியிதழ், பிறப்புறுப்புக் குழலில் முடியும். அங்கிருந்து துவங்கும் பிறப்புறுப்புக் குழல் கருப்பை வாயில் (Cervix) முடியும். பெண் குறி வெளியிதழின் மேல்புறம், சிறுநீர்ப் புறவழி (Urethra) இருக்கும். அதன் அருகில் பெண்குறிக் காம்பு (Clitoris) அமைந்திருக்கும். சினைப்பையில் நூற்றுக்கணக்கான சினை முட்டைப்பைகள் (follicle) இருக்கும். அப்பைகளில் சினை முட்டைகள் இருக்கும். பிறப்புறுப்புக் குழலின் பக்கவாட்டில் “பர்தோலியன்’’ சுரப்பிகள் (Bartholian Glands) இருக்கும். உடலுறவு வலியின்றி, எளிதாக நிகழ இந்த சுரப்பியின் சுரப்புகளே (Vaginal Secretion) காரணமாகின்றன.

இயல்பு நிலையில் ஒவ்வொரு 28 நாள்களில், “பிட்யூட்ரி’’ சுரப்பியில் (Pitutary Gland) சுரக்கும் ஊக்கி நீர் (Follicular Stimulating Hormone (FSH)) சினை முட்டையை வளர்ச்சியடைந்த பெண் அணுவாக மாற்றி, கருப்பைக்கு அனுப்புகிறது. சினைப்பையில் உள்ள சினை முட்டை, ஊக்கி நீர் தூண்டுதலால் பக்குவமடைந்து, சினைப்பை-யிலிருந்து வெளியேறும். வெளி-யேறும் முட்டை, கரு முட்டைக் குழாய் வழியே, கருப்பையை அடையும். சினைப்பையில் உற்பத்தியாகும் ஊக்கிநீர் கருமுட்டை, கருப்பையில் தாங்கும் வகையில் கருப்பை உட்சுவர்களில் (Endometricen) ஏற்படும். இந்த சினை முட்டை, ஆண் அணுவோடு இணைந்துதான் கரு உண்டாகும். ஒருவேளை கருத்தரித்தல் நிகழாவிட்டால் உட்சுவர் புறணி (Lining) சிதைவடைந்து, மாதவிலக்காக, உதிரப் போக்காக வெளிப்படும். ஆண் அணுவோடு (Sperm) இணையும் நிலை சினை முட்டைக்கு ஏற்பட்டால் கருத்தரித்தல் (Fertilisation) நிகழும். கரு வளர்ச்சியடைந்து குழந்தையாக உருவாகும். ஆண் அணுவோடு இணைந்த கருமுட்டை கருப்பையின் உட்சுவரில் ஒட்டிக்கொண்டு குழந்தையாக வளர்ச்சியடையும். இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்களாக பெண்கள் பருவமடைவர். மார்புகள் வளர்ச்சியடையும். பெண்கள் உடல் வளர்ச்சி, அவர்களின் வனப்பை மேலும் அதிகமாக்கும். இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்கள் நிகழ ஊக்கி நீர்களே காரணமாகின்றன.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக